அறிவிப்புகள்

கவிதை

வாதாபி குடைவரைக்கோயில்

வட கர்நாடகத்தில் உள்ள வாதாபி .
இரண்டாம் புலிகேசி காலத்திய குடைவரைக்கோயில்.
பேரழகும் , கலைத் திறனும் மிக்கது . ஒரு திரைப்படத்திற்காக , லொக்கேஷன் தேடித் திரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் .இந்தப் புகைப்படத்தின் தனிச்சிறப்பு ... இதை எடுத்தது இயக்குனர் இமயம் .

 

ஒற்றைச் சொல்

தாத்தாக்களும், பாட்டிகளும்
அம்மா , அப்பாவும் ,
அக்காக்களும்
ஆரம்ப , நடு , உயர் பள்ளி ஆசிரியர்களும் ,
ஒரு சில கல்லூரி ஆசான்களும் ,
வேலைக்கு வந்தவிடத்தில்
அபூர்வமாய்ச் சிலரும்
இப்படித்தான் அழைத்தார்கள் .

இன்னும் கூட மிச்சமிருக்கிறார்கள் ஓரிருவர் .
அப்படி எல்லோரும் அழைத்தது ,
என்னைத்தானென்ற போதும் ,
அழைக்கப்பட்டது நான் மட்டும் தான் .
எல்லோருமழைத்தது  எல்லாம்
செவிகளில் நுழைந்து திரும்பிய ஓசைகள் .

அதே ஒற்றைச் சொல்லால்
அவள் அழைக்கிற போது ,
உடல் , உயிர் , உணர்வு , ஆன்மாவென்று
எல்லாவற்றையும் அழைக்கிறது அது .
ஒற்றைச்சொல் மந்திரமாகும்
சூட்சுமமது .

அழைக்க அல்லாது ,
உயிர்ப்பிக்க அழைத்த ஒற்றைச் சொல்

"டே "....

 

மலர்களே இல்லாத ஒரு மலர் வளையம்

எனது தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவான "என்று தணியும் ?" ஆவணத் திரைப்படம் குறித்து தினமணி நாளிதழ் ஒரு முழுப் பக்கத் திறனாய்வைப் பிரசுரித்தது.

கும்பகோணத்தில்,  இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூலை மாதம் பதினாறாம் தேதி ஒரு தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் தொண்ணூற்று நான்கு குழந்தைகள் பலியான நிகழ்வுக்குப் பின்னே இருக்கும் உண்மைகள் குறித்துப் பேசும் ஆவணத் திரைப்படம் .

ஆவணப் படத்தின் துவக்கத்தில்  ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது இந்த மலர் வளையம் . ஆனால் .இதை வடிவமைக்க இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டது .

அந்தத் திரைப்படத்தின் டிசைனரும் , சிறந்த ஓவியனும் , எனது நண்பனுமான ஈரோடு சிவா எனக்கு நானூறுக்கும் அதிகமான மலர் வளையங்களை எனக்குக் காட்டினார் . நான் அனைத்தையும் நிராகரித்துக் கொண்டே இருந்தேன் . அவர் சலிப்பின்றி மேலும் , மேலும் காட்டிக் கொண்டே இருந்தார் .ஒரு கட்டத்தில் "சார் ... வாங்க ... எவ்வளவு பணம் செலவானாலும் சரி . கடைக்குச் சென்று நீங்க விரும்புற மாதிரி ஒரு மலர் வளையம் கட்டி , அதைப் புகைப்படம் எடுத்து அதைப் பயன்படுத்தலாம் என்றார் .  நான் அதற்கும் சம்மதிக்கவில்லை . எனது உள் மனது எதையோ தேடிக் கொண்டு இருந்தது . சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை .

மூன்றாம் நாள் அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டேன் . மனதில் இருந்தது சொற்களாகப் பீறிட்டது . " சிவா ...  மலர்களைப் போன்ற  தொண்ணூற்று நான்கு குழந்தைகள் இறந்த இடத்தில் வைக்க எனக்கு மலர்களே இல்லாத ஒரு மலர் வளையம் வேண்டும் " என்றேன் .

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இதை வடிவமைத்தார் சிவா . அந்த இரண்டு நாட்களும் மனது முழுவதும் நிறைந்து கிடந்தது இந்த மலர் வளையம் தான் . அதனால் தான் பார்த்த பல நூறு மலர் வளையங்களையும் மனது நிராகரித்தது என்பது பிறகு புரிந்தது.

 

என்னால் ஒரு போதும் முடியாது . . . .

ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல் ,
குறுந்தகவல் இல்லாமல் . . . . 
என்னால் முடியாது .

ன் உளத் தூய்மையின்
நறுமணத்தை நுகராதிருக்க ,
மடியில் தலை சாய்த்துக் கண் மூடிக்
களிப்பின் சிகரம் தொடாதிருக்க ,
ஒவ்வொரு விரலாய் முத்தமிட்டு , முத்தமிட்டு
மோகத்தில் மூர்ச்சை ஆகாதிருக்க ,
பிரிவின் பெருங் கனத்தைக் காலத்தின்
கோலமென்று கணக்குத் தீர்க்க . . . .
என்னால் முடியாது

ன்னையே நினைந்துருகும் 
பிரிவின் கடுங் காய்ச்சலை ,
உன்னையே உடனிருத்திக் களமாடும்
கனவின் உறக்கமற்ற சூறாவளியை . . . .
எதிர் கொண்டு நிற்க 
என்னால் முடியாது .

ன்னையே
நினைந்து , நினைந்து
நனைந்து , நனைந்து ,
கரைந்து , கரைந்து ,
என்னுள்
கலந்து , கலந்து போவதை ,
எங்கிருந்தோ நீ  நிகழ்த்துவதைத்
தாங்கிக் கொள்ள . . . .
என்னால் ஒரு போதும் முடியாது .

Last Updated (Tuesday, 02 February 2016 19:05)

 

உன்னால் மட்டும் தான் முடியும் . . . .

ழுதாமல்,
பார்க்காமல் ,
பேசாமல்,
குறுந்தகவல் இல்லாமல் . . . .
உன்னால் முடியும் .

ன் பேதமைகளைப்
புன்னகையால் அரவணைக்க ,
நாணி என் நடு மார்பில்
முகம் புதைக்க ,
பேரின்ப அருஞ் சுனைகளில்
தாகம் தீர்க்க ,
பிரிவின் தணலில் தனியே
உருக்கிப் பார்க்க . . . .
உன்னால் முடியும் .

ன்னை  நினையாமலிருக்கிற
பொய்மையை வெயிலாகவும் ,
என்னையே நினைந்துருகும் ,
மெய்மையை மழையாகவும்
கொட்டி விரித்துக் குறிப்புணர்த்த . . . .
உன்னால் முடியும் .

ன்னையே  நான்
நினைந்து ,நினைந்து ,
நனைந்து  ,நனைந்து
கரைந்து , கரைந்து ,
உன்னுள்
கலந்து , கலந்து போவதையும்
உணர்ந்தறிய . . . .
உன்னால் முடியும் .

ன்னால் மட்டும் தான் முடியும் . . . . 

பாரதி கிருஷ்ணகுமார்

Last Updated (Tuesday, 02 February 2016 19:00)

 
More Articles...

© All Rights Reserved

Web Design