அறிவிப்புகள்

கல்யாண்ஜி கடிதம்

kalyani-letter

சென்னை – 33

21.06.97

அன்புமிக்க கிருஷ்ண குமார்,

வணக்கம்.

மதுரை கலைஇலக்கிய இரவில் உங்கள் முகம் கிடைத்தது. கணை சிற்றிதழ் மூலம் நேற்று உங்கள் முகவரி கிடைத்தது.

ரவிசுப்புரமணியம் கொடுத்த ஒலிநாடாவில் ஜெயகாந்தன் பாரதி பற்றிப் பேசுகிற போதெல்லாம் அவருக்கு வாய்க்கிற சிந்தனையும் குரலுமாக அந்தப் பதிவு இருந்தது.

உங்கள் பேச்சை ஒலிநாடாவில் கேட்கக்கூடாது. நேரில் அதை நீங்கள் உரையாக நிகழ்த்துகையில் எதிரிருக்கவேண்டும், அல்லது உடனிருக்கவேண்டும்.

மெய்யாகவே, உரையை நீங்கள் “நிகழ்த்து” கிறீர்கள். ஒரு உயர்தர கலைஞனின் பிரசன்னத்தால் அந்தமேடையே பிரகாசமும், முழுமையும் அடைவதுபோல், உங்களின் ஓங்கி உலகளக்கிற தோற்றம் அந்த கலைஇரவு மேடையை நிறைவாக்கிக்கொண்டிருந்தது.

பேச்சின்மீது குறைந்த நம்பிக்கையுடைய எனக்குக் கூட ‘இப்படி நாமும் பேசிப்பார்த்தால் என்ன?’ என்று தோன்றிற்று. 51 வயதில் குனிந்து சலங்கை கட்டிக் கொள்வதுபோல் ஒரு ஆசை கூட வருகிறது.

உங்களுடைய தோற்றம், எல்லோரும் ஒரினம் என்று இரண்டறக் கலக்குற விதம். சற்றே உங்கள் வயதுக்குரிய தன் ஞாபகத்துடன் உங்கள் அசைவுகளின் மேலே நீங்களே கவனம்வைத்துக்கொண்டு எல்லோருடனும் (இருக்கையருகில் முழங்கால் மடக்கி அமர்ந்துகொண்டு, கழுத்தில் அணிந்திருந்த மஃப்ளரைச் சுழற்றி வீசிக்கொண்டு) பேசுகிறமுறை, நான் டவுன்பஸ்ஸிற்கு அலையும்போது, ஒருகூட்டத்தின் மத்தியில் உயர்ந்திருந்த உங்கள் முகம்...

எல்லாம் அனுபவமாயின எனக்கு. மழைபெய்த இரவுக்குப்பின்வந்திருக்கிற காற்றில் இன்றும்கூட உங்கள் குரலிருக்கிறது. நான் எப்போதாவது பேச நிர்பந்திக்கபடுவேன் எனில், உங்களுடைய அந்த்க் கம்பீரமான, அற்புதமான குரலின் தோளை, அல்லது விரலையேனும், பற்றிக்கொண்டே மேடையேற நினைப்பேன்.

 

மனப்பூர்வமான வாழ்த்துக்களுடன்

கல்யாணி

  

கந்தர்வன் - கடிதம்

gandharvan-letter

கந்தர்வன் புதுக்கோட்டை

11.01.84

என் அன்புத் தோழர் கிருஷ்ண குமார், வணக்கம்.

கடந்த பலநாட்களாக என் சோகங்களுள் பெரும் சோகமாக உங்கள் மௌனம் என்னைத் தொடந்து வருத்தியும் துன்புறுத்தியும் வருகிறது. பூமியில் பரவிய தூரம் என்னை இது விஷயத்தில் உதவாக்கரை ஆக்கி விட்டது. உங்களோடு உடனே பேசத்துடித்தேன். தேவைப்பட்டால் மண்டியிடவும் தயாரானேன். திரும்பவும் பூமியில் பரவிய தூரமே என்னை இது விஷயத்தில் உதவாக்கரை ஆக்கிவிட்டது.

காரணங்கள் அகவயப்படதாயினும், புறவயப்ட்டதாயினும் இருக்கலாம். இருக்கட்டும். புரட்சி வசப்பட்டவருக்கு இவை எவையும் காரணங்கள் ஆகமுடியாது.

சில்வர்டங் சீனிவாச சாஸ்திரிகளை நாங்கள் பார்த்த்தில்லை. கில்லட் டங் கிருஷ்ண குமாரை  நாங்கள் எங்கள்  தலைமுறையில் பார்க்கிறோம்.

இந்தக் காலத்தின் அவசியப் பிரசவம் உங்கள் வரவு. இனியுள்ள காலத்தில் சிறு சிறு கூட்டத்தை எழுப்புவதல்ல உங்கள் வேலை. இந்த தமிழ் மண்ணின் தாவரங்களும் உங்கள் மொழிகேட்டு ஆவேசம் பெறவேண்டும். தனிப்ட்ட உங்களின்  விருப்பு வெறுப்புகளுக்கான உங்கள் உரிமையை உரிமையோடு உழைக்கும் வர்க்கம் பறிக்கப்போகிறது. வர்க்க பந்தங்களே உங்கள் வாழ்க்கையாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

சிங்கம் க்ர்ஜிக்காமல்

குயில் கூவாமல்

வாழ்வேன் என்பது இயற்கை விரோதம்

நீங்கள் பேசமாட்டேன் என்பது

வர்க்க துரோகம்.

மௌனம் கலையட்டும், மனிதர்களோடு வானம் மலைகள் கடல்களெல்லாம் காதுகளைத் திறந்து கொள்ளட்டும். நானே முதல் அழைப்பை விடுக்கிறேன். வரும் 19.01.84 அன்று புதுக்கோட்டை காவேரி மில்(நகரில்)லில் சி.ஐ.டி.யூ சார்பில் தியாகிகள் தினம். மாநில தலைவர்களில் ஒருவர் வருகிறார். விழாவை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பபாடுகள் நடக்கின்றன. பட்டிமன்றம் உண்டு

 

தலைப்பு : ஆலைகள் மூடலுக்கும் ஆட்குறைப்பிற்கும் காரணம் அரசின் நடைமுறையே / தொழிலாளர்களின் செயற்பாடே

 

நடுவர் : கிருஷ்ணகுமார் (பாலாஜி என்ற பெயரில்)

 

சம்மதம் ஒப்புதல் என்கிற ஒழங்குமுறைகளை மீறி பத்திரிக்கை அடிக்ப்பட்டுவிட்டது. உங்களிடமிருந்து ஒரு நல்ல பதில் வேண்டும்.

அன்புடன்

கந்தர்வன்

 

© All Rights Reserved

Web Design