அறிவிப்புகள்

கரையுடைத்தது கண்ணீர்

குருவிக்காரன் சாலை கீழ் இறங்கி, வைகை ஆற்றுக்குள் தரைப்பாலமாகி, மீண்டும் மேடேறிக் கொள்ளும். ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது வைகை.கடந்து போன வாகனங்களும, மனிதர்களும்,கூட மௌனமாகக் கடந்து போனார்கள் .எப்போதாவது சூழலும் நமது மௌனத்தை ஏற்று தனதாக்கிக் கொள்ளுகிறது.

முதல் நாள், திருப்புவனத்தில் வைகையாற்றில் தான் அம்மாவின் அஸ்தியைக் கரைத்தோம். பூமிக்கு வந்த ஆத்மாக்களைத் திருப்பி அனுப்புகிற வனம் என்பதால் "திருப்புவனம்" என்றார்கள். இங்கு அஸ்தியைக் கரைத்திருக்கக் கூடாது என்று அப்போது தோன்றியது எல்லாம் நடந்து முடிந்த பிறகு, என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று யோசனைகளை உற்பத்தி செய்து காட்டுவது, மனசுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பாலம் கடந்து மேடேறியதும், இடதுபுறம் இருந்த திரையரங்கின் வாசளில் நின்று, "சினிமாவுக்குப் போகலாமா ?" என்று கேட்டார் அக்கா வீட்டுக்காரர். மறுக்கவுமில்லை. சம்மதிக்க்கவுமில்லை. ரெண்டுங்கெட்டான் நிலை என்பது இதுதான், என்று இப்போது தெரிகிறது. இழுத்த இழுப்புக்குப் போய், உள்ளே உட்கார்ந்த சில நொடிகளில் திரைப்படம் ஆரம்பித்தது.

நேர்த்தியான ஒளிப்பதிவு, பொருத்தமான பின்னணி இசை, அளவான உரையாடல்கள் எனப் படம் நகர்ந்தது. ஒரு வாழ்க்கையை அவதானிக்கிறோம் என்ற உணர்வை, படம் உடனே உருவாக்கி விட்டது. திருமணமான மகளின் உயிர் பிரியும் தருணத்தில், அவரது தகப்பன் மகளின் குழந்தைகளை அழைத்து அவர்களை தங்கள் தாயின் வாயில் பால் ஊற்றுகிற காட்சி. பாலூட்டி வளர்த்த தாய்க்குக் குழந்தைகள் பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். பால் இறங்க மறுத்து, வளதுபுறமாய் வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. தாயின் உயிர் பிரிந்த அந்த தருணத்தில், அரங்கிலிருந்து வெளியேறி படிகள் இறங்குகிற இடத்தில், திரண்டிருந்த அரையிருட்டில் அமர்ந்தேன். எந்தப் பிரயாசையுமின்றி கரையுடைத்துப் பெருகியது கண்ணீர்.

அம்மா இறந்து இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பின், அதே திரைப்படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வந்தபோது, அதன் முதல் பிரதியை சென்னை புத்தகத் திருவிழாவில் நானே வெளியிட நேர்ந்தது. முன்பு அந்த திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்த நாளையும், கண்ணீர் கரையுடைத்துப் பெருகியதையும் அரங்கிலேயே குறிப்பிட்டு, முதல் பிரதியை வெளியிட்டேன் "உதிரிப்பூக்கள்" என் வாழ்வில் கலந்துவிட்ட ஒரு திரைப்படம் தான்.

 

பாரதி கிருஷ்ணகுமார் ( This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ) ( This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it )

 

© All Rights Reserved

Web Design