அறிவிப்புகள்

என்று தணியும்-வெளியீட்டு விழா

கும்பகோணம் தீ விபத்தில் 94 குழந்தைகளை காவு கொடுத்த இரண்டாம் ஆண்டு நினைவுநாள் சோகத்தை முழுக்க முழுக்க உள்வாங்கி, கல்வியென்ற பெயரில் மிக நேர்த்தியாக 94 குழந்தைகளை கொலை செய்ததை மிக அழுத்தமாக பதிவுசெய்கிறது படம். இன்றோடு சுமார் 2191 நாட்களைக் கடந்துவிட்டோம், இந்த தேசத்தில் நீதி எப்போதுமே தாமத்தித்துத்தான் கிடைக்கும் அல்லது கிடைக்காமலும் போகும் என்பதை அரசு, நீதி இயந்திரங்கள் மீண்டும் நிரூபித்து வருகிறது.

 

 

“சொல்ல மனம் துடிக்குது தேம்பித் தேம்பி

இந்தப் புள்ளக்கறி கேட்டது எந்தச்சாமி

பாழும் திருவுளமே பாழும் திருவுளமே

வாழப்பிடிக்கலையே சோழப்பெருநிலமே

 

இப்ப அழைச்சதுபோல் இருக்கே ஏம்புள்ள முகம்

எப்போ திரும்பிவரும் ஏம்வீட்டுச் செல்லரதம்

தவழ்ந்த வாசம் இன்னும் தரை விட்டு போகலையே

கண்வளர்த்த தொட்டில் இன்னும் காத்தசஞ்சும் ஆடலையே

 

பால்வாசம் மாறும் முன்னே பாலூத்த விட்டீகளே

தங்கத்த கருகவிட்டு சாம்பலத்தான் தந்தீகளே

மாடு அலறலையே, வழிகூட மறிக்கலையே

மாடவிளக்கணிச்சு மரணத்த சொல்லையே”

 

மனசை கலங்கடிக்கும் பாடலோடு துவங்குகிறது பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் இயக்கிய ”என்று தணியும்” என்ற ஆவணப்படம்…

 

63 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், பல கல்வியாளர்கள் கல்வி எவ்வளவு மோசமான ஒரு வியாபாரப் பொருளாக போய்விட்டது என்பதையும், இலவசமாக கல்வியை கொடுக்க வேண்டிய ஒரு அரசு எவ்வளவு மூடத்தனத்தையும், முட்டாள் தனத்தையும் கல்வி அமைப்புகள் மேல் திணித்துள்ளது என்பதையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

 

கும்பகோணத்தில் எரிந்தவுடன், கூரைகளை பிரிக்கச் சொல்லி ஆணையிட்டார்கள், பள்ளி வாகனம் பள்ளத்தில் விழுந்தவுடன் வாகனத்தை தணிக்கை செய்யச் சொன்னார்கள். ஒரு பெரும் சோகத்தை அமுக்கிவிட பெரிதாய் ஒரு பரபரப்பை மட்டும் கிளப்புவதை அரசாங்கம், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மிக மிக நேர்த்தியாக, கவனமாக செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

 

மூன்றாவது தூண் எனும் ஊடகங்கள், வெறும் வெற்று பரபரப்பை கிளப்பி, மக்களை அப்போது மட்டும் பார்க்கவைத்துவிட்டு போவதும் வழக்கமாகப்போய்விட்ட ஒரு ஜனநாயக(!) நாட்டில்தான் நாமும் என்னென்னவோ நம்பிக்கைகளை தாங்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

படத்தில் ஒரு இடத்தில் பேசும் சினிமா இயக்குனர் சந்தானபாரதி, தாங்கள் கும்பகோணத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தபோது, அங்கு திரளாக கூடிய பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வந்த நடிகர்களை தொட்டுப்பார்க்க, ரசிக்க, கையெழுத்து வாங்க துடித்ததை வேதனையோடு கூறினார்.

பள்ளியில் ஒரு குழந்தைக்கு ஒன்பது சதுர அடி இடம் குறைந்தது இருக்க வேண்டும் என்பது சட்டம், நம்மில் எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும். குழந்தைகளை பெற்று சீராட்டி வளர்க்கும் நம்மில் எத்தனை பேருக்கு குழந்தைகள் அதிக நேரம் கழிக்கும் பள்ளியின் சுகாதாரம், அங்கு இருக்கும் வசதி குறித்து கேட்டுத்தெளிய ஆர்வம் இருக்கிறது அல்லது ஆர்வம் இருப்பின் பள்ளிகள் அனுமதிக்கின்றன.

தமிழனனின் ரசிப்புத்தன்மையும் கூட வக்கிரமாக மாறிவருவதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும், அதே சமயம் சீருடையாய் கருப்பு வண்ண உடையோடு, கண்ணில் குளிர் கண்ணாடியோடு, ஆடிக்கொரு முறை அம்மாவாசைக்கொரு முறை பெரும் சோகங்கள் நிகழும் போதெல்லாம், அஞ்சலி, மறியல், உண்ணாவிரதம் இன்னபிற விசயங்களைச் செய்து  நாள் முழுக்க தொலைக்காட்சிகளில் நேரலையில் வந்து கொண்டாடி விட்டுப்போவதைத் தாண்டி அவர்களும் தங்கள் கையில் இருக்கும் சக்தி வாய்ந்த ரசிகர்கள் கூட்டங்கள் மூலம் ஒன்றையும் கிழித்துவிடவில்லை.

 

படம் முழுதும் ஆக்கப்பூர்வமாக பேசியிருக்கும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரமாகிவிட்ட கல்வியை விலாவாரியாக பிரித்து மேய்கிறார்கள் கேள்விகளால் துளைக்கிறார்கள், விடைமட்டும் கிணற்றில் போட்ட கல்லாய் மௌனித்துக் கிடக்கிறது.

 

பள்ளியில் ஒரு குழந்தைக்கு ஒன்பது சதுர அடி இடம் குறைந்தது இருக்க வேண்டும் என்பது சட்டம், நம்மில் எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும். குழந்தைகளை பெற்று சீராட்டி வளர்க்கும் நம்மில் எத்தனை பேருக்கு குழந்தைகள் அதிக நேரம் கழிக்கும் பள்ளியின் சுகாதாரம், அங்கு இருக்கும் வசதி குறித்து கேட்டுத்தெளிய ஆர்வம் இருக்கிறது அல்லது ஆர்வம் இருப்பின் பள்ளிகள் அனுமதிக்கின்றன.

 

சமீபத்தில் அரசாங்கம் கொண்டுவந்த கட்டணக்குறைப்பு முறையை அமுல்படுத்தா பள்ளிகளுக்கு எதிராக குரல் கொடுக்க எத்தனை சதவிகிதம் பெற்றோருக்கும் பொறுமையும் துணிவும் இருக்கின்றது, அல்லது வாங்கும் கட்டணத்திற்கேற்ப வசதி செய்து கொடுக்க பள்ளியை வலியுறுத்த எத்தனை பேருக்கு உரிமை இருக்கின்றது.

 

எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள, எது வந்தாலும் தாங்கிக்கொண்டு மௌனியாக இருக்க மிக எளிதாக பழக்கப்பட்டு வருகிறோம். வசதியான இடங்களில் மதுக்கடைகளை நிறுவிக்கொண்ட நமக்கு பள்ளிகள் பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே கிடைக்கின்றன. மது தேசிய உடமையானதைப் பற்றியும், கல்வி முழுக்க முழுக்க வியாபாரமானதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ள பொறுமையில்லை யாருக்கும்.

 

தனக்கு நடந்தால் அது பெரும் சோகம், மற்றவர்களுக்கு நடந்தால் அது ஒரு சம்பவம் என்ற நம் மனநிலை, தொடர்ந்து எத்தனை சோகம் நிகழ்ந்தாலும் அதை சிறிது காலத்தில் மறக்கடித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

 

சாலைச் சந்திப்புகளில் கோட்டைத் தாண்டி நிற்கும் நடுத்தரவர்கத்திற்கு உடனுக்குடன் தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டும் இறையாண்மை மிகுந்த இந்தத் திருநாட்டில், மனிதன் இழைத்த குற்றங்களில் நிகழும் மரணங்களெனும் கொலைகளுக்கு நீதி நீர்த்துப் போய்விடுவதை, அநீதி இழைக்கப்பட்டவர்களைத் தாண்டி யாரும் கேட்கத் தயாரில்லை.

 

கருகிப்போனது சில ஆண்டுகள் வளர்ந்த குழந்தைகள் மட்டுமா? பல தலைமுறைகளின் ஒட்டுமொத்த கனவும், வரலாறும் தானே?

 

அலட்சியத்தின்பால் கொலையுண்டு போன பிஞ்சுக்களின் ஆத்மா, நீதி கிடைக்காமல் சாந்தியடைந்துவிடுமா என்ன? தங்களைப் போன்று படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக இருக்க தங்கள் மரணங்களை ஒரு எச்சரிக்கையாகவே விட்டுவிட்டு போயிருக்கும் அந்த ஆத்மாக்கள் வணக்கத்திற்குரிய காவல் தெய்வங்களாகவே கருதப்படவேண்டும்.

 

என்று தணியும்… 94 நான்கு குடும்பங்களில் கொதிப்போடு எரியும் இயலாமைத் தீ?

 

என்று தணியும்… கல்வி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் போக்கு?

 

என்று தணியும்… நீதியின் தாமதப் பசி?

 

என்று தணியும்… காசுக்காக எதையும் ஆராயாமல் அனுமதித்து விட்டு, மற்றவர்கள் மேல் பழிசுமத்தும் பல அரசு அதிகாரிகளின் பணவெறி?

 

காலம் பலவற்றை கரைத்துப் போகும், சிலவற்றை அடர்த்தியாக்கிப் போகும். கும்பகோணம் விபத்தின் சோகம் அதில் தொடர்பில்லாத எல்லோருக்குள்ளும் கிட்டத்தட்ட கரைந்தே போய்விட்டது, ஆனால் அதே காலம் நீதி கிடைக்காமல் அலையும் அந்த பெற்றோர்களின் மனதில் இயலாமையையும் சேர்த்து சோகத்தை அடர்த்தியாக்கிக் கொண்டுதானே இருக்கின்றது?

 

என்றுதான் தணியும் இந்தச் சோகம்?

 

பொறுப்பி:தலைப்பு, பாடல் மற்றும் சில கருத்துகள் பாரதிகிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வந்த என்று தணியும் ஆவணப்படத்தில் எடுக்கப்பட்டது.

 

© All Rights Reserved

Web Design